''பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க பொடா சட்டம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும்'' என்று இல.கணேசன் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை குறி வைத்து தீவிரவாதிகள் இந்த தாக்குதல்கள் நடத்தியுள்ளனர் என்றும் இது போன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க பொடா போன்ற கடுமையான சட்டம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்று இல.கணேசன் கூறினார்.
பல்வேறு கட்சித் தலைவர்கள் பெங்களூரு, அகமதாபாத் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு நிகழ்வுகளை கண்டித்துள்ள நிலையில், முதலமைச்சர் கருணாநிதி மட்டும் அவற்றை ஏன் கண்டிக்கவில்லை என்று இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பயங்கரவாதிகள் மத்தியில் தமிழக அரசு மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறது. இந்த பயங்கரவாதிகள் தேர்தலின் போது தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்களின் வெற்றிக்கு உதவி செய்ததால், அவர்கள் மீது மென்மையான போக்கை கடை பிடிக்கப்படுவதாக சந்தேகம் எழுகிறது என்று குற்றம்சாற்றியுள்ளார்.
தனுஷ்கோடியில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முடிவடையும் யாத்திரை நிறைவு விழாவில் பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார் என்று தெரிவித்த இல.கணேசன், பா.ஜ.க சார்பில் செப்டம்பர் முதல் வாரத்தில் மீனவர்கள் வாழ்வுரிமை மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
ராஜீவ்காந்தி, ஜெயவர்த்தனே ஆகியோர் போட்ட அமைதி ஒப்பந்தத்தை சிறிலங்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை போல, கச்சத் தீவு ஒப்பந்தத்தையும் இந்திய உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். அப்போதுதான் மீனவர் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று இல.கணேசன் கூறினார்.