டிக்கெட் பரிசோதகருக்கும், ரயில்வே பாதுபாப்பு படையை சேர்ந்த காவலருக்கு இடையே நடந்த தகராறில், திடீரென பாதுகாப்பு வீரர் துப்பாக்கியை எடுத்து சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை எழும்பூரில் இருந்து நேற்று இரவு சென்னை- தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில் புறப்பட்டு சென்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் மணிமந்திரம் என்பவர் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
ரயில் விழுப்புரத்துக்கும் விருத்தாசலத்திற்கும் இடையே வந்து கொண்டிருந்த போது டிக்கெட் பரிசோதகர் ரகுராமன், பாதுகாப்பு படை வீரர் மணிமந்திரத்திடம் டிக்கெட் கேட்டுள்ளார்.
அப்போது இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ரயில் திருச்சி வந்த போது, பாதுகாப்பு படை வீரர் மணிமந்திரம், டிக்கெட் பரிசோதகர் ரகுராமனை ரயிலில் இருந்து கீழே இறக்கி அங்குள்ள ரயில்வே அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். அங்கிருந்த பாதுகாப்பு படையினர் ரகுராமனிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இது பற்றி தகவல் அறிந்த ரயில் ஊழியர்கள் 50 பேர் அங்கு திரண்டு, டிக்கெட் பரிசோதகர் ரகுராமனை மீட்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு படை வீரர் மணிமந்திரம், தான் வைத்திருந்த துப்பாக்கியால் மேலே சுட்டானார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் நடந்த நிகழ்வுகள் குறித்து இருவரும் கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.