பெங்களூரு, அகமதாபாத் நகரங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலையடுத்து, தமிழகத்தில் உள்ள கோயில்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது!
கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் 9 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
அதற்கு அடுத்த நாளே (சனிக்கிழமை) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுத்தடுத்து 16 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் இதுவரை 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பெங்களூரு, அகமதாபாத்தை தொடர்ந்து தமிழகத்தின் கோயில்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தமிழக காவல் துறைக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகப்படுத்தப் பட்டுள்ளதாக தமிழக காவல் தலைமை இயக்குனர் ஜெயின் கூறியுள்ளார்.
இதனிடையே, அகமதாபாத்தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு முன்னர் வந்த மின்னஞ்சல், மும்பையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த மின்னஞ்சலை இண்டியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு அனுப்பியுள்ளதாக உளவுத்துறையினர் கூறியுள்ளனர்.
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள சிமி இயக்கத்தினரே இண்டியன் முஜாஹிதீன் என்ற பெயரில் இயங்கி வருவதாகவும் உளவுத்துறை சந்தேகிக்கிறது.