''ராமர் சேதுவை தகர்த்து மதக் கலவரங்கள் ஏற்பட மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் அ.இ.அ.தி.மு.க. சகித்துக் கொள்ளாது'' என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ராமர் என்று ஒருவர் வாழ்ந்ததே இல்லை; அது வெறும் கற்பனை என்று முன்னர் வாதிட்ட மத்திய அரசு, இப்போது ராமர் என்று ஒருவர் வாழ்ந்தார் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறது. ராமபிரான் தன்னுடைய மாய அம்பினை எய்தி பாலத்தை மூன்றாக உடைத்துப்போட்டுவிட்டார் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் வாதம் கூறுகிறது என்று தெரிவித்துள்ளார்.
சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலம் இடிக்கப்பட வேண்டி இருக்கிறது என்பது தான் மத்திய அரசு எடுத்திருக்கும் புதிய நிலைப்பாடு என்று கூறியுள்ள ஜெயலலிதா, "செயற்கைக்கோள் படங்களில் கூட தெள்ளத் தெளிவாக பார்க்கக் கூடியதாய் அமைந்துள்ளது இந்தப்பாலம். இந்தப் பாலத்தை இடிப்ப தென்பது தென்னிந்திய பண்பாட்டின் மகத்தான படைப்பு ஒன்றை தகர்ப்பதற்கு நிகராகும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தங்களது சொந்த நலனுக்காகவும், குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காகவும், தம் முன்னோரின் மகத்தான படைப்பு ஒன்றை தகர்த்தெறிய தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் கூட வரிந்து கட்டிக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.
தி.மு.க.வின் தொடர் தூண்டுதலால் மக்களின் உண்மைப் பிரச்சினைகளை புறந்தள்ளிவிட்டு, இத்தகைய மக்கள் விரோத செயல்களில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தொடர்ந்து ஈடுபட்டால், அடுத்து வரும் தேர்தலில் மக்கள் அதனை தூக்கி எறிவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ள ஜெயலலிதா, ராமர் சேதுவை தகர்த்து மதக் கலவரங்கள் ஏற்பட மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் அ.இ.அ.தி.மு.க. சகித்துக் கொள்ளாது. அத்தகைய முயற்சி ஏதும் நடை பெற்றால், அதனை எல்லா முறைகளிலும் அ.இ.அ.தி.மு.க. எதிர்க்கும் என்றும் உண்மையான மதச்சார்பின்மையைக் காப்பாற்ற உச்ச நீதிமன்றத்தில் போராடுவோம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.