மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு நம்பிக்கையில் தோல்வியடைந்து வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் இல. கணேசன் கூறினார்.
இது குறித்து ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு நம்பிக்கையில் தோல்வியடைந்து வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளது. இது தார்மீக வெற்றி இல்லை. மத்திய அரசு இந்த வெற்றியை பெற என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இம்மாதம் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் மற்றும் தெருமுனை பிரச்சாரங்கள் நடத்தப்படும்.
உச்ச நீதிமன்றத்தில் ராமரே ராமர் பாலத்தை இடித்துவிட்டார் என கூறினர். இதன் மூலம் ராமர் பாலம் அமைத்தார் என்பதை அரசு ஒப்புக்கொண்டது. இதனால் தி.மு.க. முயற்சி தோல்வியடைந்து மாற்றுபாதை அமைக்க ஆராயவேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதை வரவேற்கிறோம்.
அணு சக்தி ஒப்பந்தத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்பட்டால் எதிர்ப்பு தெரிவிப்போம். அணு ஆயுத ஆய்வு செய்ய விடமாட்டோம் என்றால் எதிர்ப்போம்.
மூன்றாவது அணிபற்றி எங்களுக்கு கவலையில்லை. மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி ஏற்பட்டாலே காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து விட்டது என அர்த்தம்'' என்று இல.கணேசன் கூறினார்.