''தமிழகத்தில் ரூ.32,000 கோடி செலவில் இரண்டு இடங்களில் 8,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையங்கள் அமைக்கப்படும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
மத்திய அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து நேற்றிரவு சென்னை திரும்பி முதலமைச்சர் கருணாநிதி, சென்னை அண்ணா அறிவாலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ள 100 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு எத்தனை ஆண்டு கொடுப்பார்கள் என்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கருணாநிதி, மத்திய அரசிடம் இருந்து 300 மெகவாட் மின்சாரம் கேட்டோம். வட மாநிலங்களில் மின் பற்றாக்குறை இருப்பதால் தமிழகத்திற்கு அவ்வளவு மெகாவாட் மின்சாரம் தர முடியாது என்றும் ஓரளவுதான் தர முடியும் என்று பிரதமர் தெரிவித்தார் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், முதற்கட்டமாக 30 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 மெகாவாட் வீதம் தருகிறோம் என்று மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஷிண்டே உறுதி அளித்தார் என்றார்.
மின்பற்றாக்குறை தமிழகத்தில் எப்போது நீங்கும்? என்று கேட்டதற்கு, மத்திய அரசோடு நடத்திய பேச்சுவார்த்தையில் 2 அல்ட்ரா மெகா பவர் புராஜக்ட் ரூ.32 ஆயிரம் கோடியில் தமிழகத்துக்குக் கொடுக்க முடிவு செய்துள்ளார்கள் என்று கூறிய கருணாநிதி, அதில் ஒன்று, செய்யூரிலும் மற்றொன்று மரக்காணம் அல்லது கடலூரில் அமைக்கப்படும். இந்த 2 பவர் புராஜக்ட் மூலம் தலா 4,000 மெகாவாட் வீதம் மொத்தம் 8,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்றார்.
மீனவர்கள் பிரச்சினை பற்றி பிரதமரிடம் பேசினீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பெரும் பகுதி தமிழக மீனவர்களைப் பற்றித் தான் பிரதமரிடம் பேசினோம். சிறிலங்காவில் நடக்கும் சார்க் மாநாட்டிற்குச் செல்கின்ற பிரதமர் அதைப் பற்றி நிச்சயமாக பேசுவதாக நேற்றும் எங்களிடம் உறுதிப்படுத்தினார் என்றார் கருணாநிதி.
எத்தனை நாட்களில் அணுசக்தி ஒப்பந்தப் பணிகள் முடிவடையும் என்ற கேள்விக்கு பதில் அளித்த கருணாநிதி, வெகுவிரைவாக அதற்கான பணிகள் எல்லாம் தொடங்கப்பட்டு விட்டன. அதற்காக முக்கியமாக அமைச்சர்கள், அதிகாரிகள் உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள் என்றார்.
3வது அணியை அமைக்கவிருப்பதாகக் கூறும் இடதுசாரிகள் உங்களிடம் பேச வந்தால் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டதற்கு, நான்காவது அணியை பற்றிப் நான் பேசுவேன் என்று கருணாநிதி நகைச்சுவையாக பதில் அளித்தார்.