''தமிழகம் முழுவதும் உடனடி அவசர வாகன ஊர்தி சேவை ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும்'' என்று சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒருங்கிணைக்கப்பட்ட அவசர ஊர்தி சேவை சென்னையை தலைமையிடமாக கொண்டு விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்த அவர், இதற்கு என ஒரு நேரடி தொலைபேசி இணைப்பு நம்பர் (ஹாட் லைன்) கொடுக்கப்படும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த நம்பரில் அழைக்கப்படுபவர் இடம் அறியப்பட்டு அங்கு உடனடியாக அவசர ஊர்தி சென்று அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள் என்றார்.
இந்த அவசர ஊர்தி வாகனம் அனைத்து மருத்துவ வசதிகளுடன் இருக்கும் என்று தெரிவித்த அவர், முதல் கட்டமாக 198 அவசர ஊர்திகள் வாங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், இந்த அவசர ஊர்தி வாகனம் சேவை தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.
ஆகஸ்ட்டில் இந்த அவசர ஊர்தி சேவை தொடங்கும் என்று கூறிய அமைச்சர், சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து இந்த அவசர மருத்துவ ஆய்வு மையம் இயங்கும் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.