சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையில், தமிழக அரசின் வழக்கறிஞர் ஆஜராக உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வாதாட புதுச்சேரி அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக முந்தைய அ.இ.அ.தி.மு.க அரசு , ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரை கைது செய்தது.
பின்னர் நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுதலை செய்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை வேறு மாநிலத்தில் நடத்தப்பட வேண்டும் என்ற ஜெயேந்திரர் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை புதுச்சேரி நீதி மன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கில், அரசு தரப்பில் தமிழக அரசின் வழக்கறிஞர் ஆஜராக எதிர்ப்பு தெரிவித்து ஜெயேந்திரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுமுறைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தமிழக அரசின் வழக்கறிஞர் ஆஜராகி அரசு தரப்பில் வாதாடக்கூடாது என்றும், புதுச்சேரி அரசு வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.