ஈரோடு சின்னமுத்து வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (40). இவர் இங்குள்ள கல்யாண விநாயகர் கோயில் அறங்காவல் உறுப்பினராக உள்ளார். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு பிரவீணா (18) என்ற மகள் உள்ளார். தற்போது பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் டெக்னாலஜி பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார்.வகுப்புகள் இன்னும் தொடங்காத நிலையில் வீட்டில் இருந்து வந்தார் பிரவீணா. இந்த நிலையில் திருப்பூரை சேர்ந்த பி.எஸ்.என்.எல்., கண்காணிப்பாளர் கந்தசாமி மகன் வெங்கடாசலபதி (24). இவர் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் எம்.எஸ்சி. சாப்ட்வேர் பாடப்பிரிவில் படித்து வருகிறார்.வெங்கடாசலபதிக்கு ஒரு தங்கை உள்ளது. இவருக்கு திருமணம் நடக்க தாமதமாகி வருவதால் இதற்கு ஈரோடு சின்னமுத்து வீதியில் உள்ள கல்யாண விநாயகர் கோயிலில் பரிகார பூஜை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என உறவினர்கள் கூறினர். இதனால் கடந்த மூன்று மாதங்களாக கந்தசாமி தன் மகன் வெங்கடாசலபதி மற்றும் குடுப்பத்தாருடன் கல்யாண விநாயகர் கோயிலில் பரிகார பூஜை நடத்தி வருகிறார்.இதனால் பூஜைபொருட்கள் வாங்க வெங்கடாசலபதி செல்வராஜ் வீட்டிற்கு செல்லும்போது அவரது மகள் பிரவீணாவை பார்த்து தன் மனதிற்குள் அவள் மீது காதல் வளர்த்து கொண்டார். பிரவீணாவிற்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பி தொரந்தரவு செய்துள்ளார். தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளார். ஆனால் பிரவீணா திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
கடந்த பத்து நாட்களுக்கு முன் கோயிலில் இருந்த செல்வராஜிடம், உங்கள் மகள் பிரவீணாவை திருமணம் செய்து வைக்கும்படி வெங்கடாலபதி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ், வெங்கடாசலபதியை திட்டியுள்ளார். மேலும் ஈரோடு ஜவுளி கடையில் பணிபுரியும் அவரது உறவினரிடமும் புகார் செய்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று பிரவீணா வீட்டை தாலிகயிற்றுடன் நோட்டமிட்ட வெங்கடாசலபதி, செல்வராஜ் கோயிலுக்கு சென்றவுடன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பிரவீணா அவரது அம்மா சாந்தி ஆகியோர் இருந்தனர். உடனே சாந்தியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். சாந்தியும் சமையலறைக்கு தண்ணீர் எடுக்க சென்ற சமயத்தில் பிரவீணாவின் கையை பிடித்து இழுத்து தன்னுடன் வருமாறு வெங்கடாசலபதி வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் பிரவீணா மறுத்தார். உடனே தான் மறைந்து வைத்திருந்த கத்தியை எடுத்து வயிறு, மார்பு, தோல்பட்டை உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். பிரவீணாவின் அலறல் கேட்டு ஓடிவந்த சாந்தி இந்த சம்பவத்தை பார்த்து அலறினார். உடனே வெங்கடாசலபதி அந்த வீதியில் தப்பியோடினார். சத்தம் கேட்ட பொதுமக்கள் வெங்கடாசலபதியை மடக்கி பிடித்து அருகில் இருந்த மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்தனர்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆய்வாளர் அகஸ்டின்பீட்டர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் இருந்து வெங்கடாசலபதியை மீட்டனர். உயிருக்கு போராடிய பிரவீணாவை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தார். இந்த சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.