தமிழக மீனவர்கள் மீதான சிறிலங்க கடற்படையினரின் தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
தமிழக கடற்கரையோர பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் போது, சிங்கள ராணுவ வீரர்களால் காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும் மற்றும் இப்பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் தி.மு.க.சார்பில் தமிழகம் எங்கும் உண்ணாவிரத அறப்போராட்டம் இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.
சென்னை சேப்பாக்கத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி காலை 8 மணிக்கு தொடங்கி வைத்தார். இந்த உண்ணா விரத போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
இதேபோல், நாகப்பட்டினத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையிலும், மாமல்லபுரத்தில் அமைச்சர் துரைமுருகன் தலைமையிலும், திருவொற்றியூரில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, அமைச்சர் கே.பி.பி.சாமி தலைமையிலும் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.
கடலூரில் மத்திய அமைச்சர் ஆ.ராசா, வேங்கடபதி தலைமையிலும், தரங்கம்பாடியில் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மரக்காணத்தில் அமைச்சர் பொன்முடி. வேதாரண்யத்தில் அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்டம் உவரியில் ரகுமான்கான், பூம்புகாரில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலும் உண்ணா விரதம் நடந்து வருகிறது.
தூத்துக்குடியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா தலைமையில் உண்ணாவிரதம் நடக்கிறது.
இதே போல் மற்ற மாவட்டங்களில் அந்த மாவட்ட செயலர்கள் தலைமையில் உண்ணாவிரதம் நடந்து வருகிறது. உண்ணாவிரதத்தை யொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. உண்ணாவிரதத்தை அமைச்சர் அன்பழகன் முடித்து வைக்கிறார்.