சென்னை மாநகராட்சி சார்பில் 28 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இவர்களில் மாவட்ட குடும்ப நலத் துறையில் 17 மருத்துவ அலுவலர்களும், பொது சுகாதாரத் துறையில் 11 மருத்துவ அலுவலர்களும் ஆவர்.
இந்த மருத்துவர்களுக்கு 8000-275-13,500 என்ற காலமுறை ஊதிய விகிதத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பொது சுகாதாரத் துறையில் 2001ஆம் ஆண்டு முதல் காலியாக இருந்த 32 மருத்துவ அலுவலர் பணியிடங்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஏற்கனவே 21 மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டார்கள். தற்போது காலியாக இருந்த 11 மருத் துவ அலுவலர்கள் பணியிடங்களும் நிரப்பப்பட்டன.
இதன் மூலம் நாள்தோறும் சென்னை மாநகரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் மாநகராட்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பயன்பெறுவார்கள்.
சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 118 பணியிடங்களில் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் நிரப்பப்பட்டுள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களில் சென்னை மாநகராட்சியில் 2009 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.