அணுசக்தி ஒப்பந்தம், விலைவாசி உயர்வு ஆகிய பிரச்சினைகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்த மாநில கம்யூனிஸ்டு கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் என்.வரதராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நமது நாட்டின் அடிப்படை நலனுக்கு விரோதமான முறையிலும், இடதுசாரி கட்சிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு புறம்பான முறையிலும், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முனைந்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நடவடிக்கையை எதிர்த்து நாடு தழுவிய பிரசார இயக்கங்களை நடத்துவது என இடது சாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன.
மக்கள் வாழ்க்கையை சீரழித்து வருவதுமான விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது பற்றி, மத்திய அரசு கவலைப்படவே இல்லை. விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக, இடதுசாரி கட்சிகள் முன் வைத்த ஆலோசனைகளை மத்திய அரசு முற்றிலுமாக புறக்கணித்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தின் பாதக விளைவுகளை விளக்கியும், விலை உயர்வை கட்டுப்படுத்த மறுத்து வரும் மத்திய அரசை கண்டித்தும் நாடு தழுவிய முறையில் நடைபெற்று வரும் பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜூலை 25ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் தமிழகத்தின் பிரதான மையங்களில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்கள் நடத்துவதென்றும் முடிவு செய்துள்ளது.
கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, சேலம், ஈரோடு, வேலூர், திருச்சி, திருவாரூர் ஆகிய மையங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அகில இந்திய மாநில தலைவர்கள் பங்கேற்பார்கள். பங்கேற்கும் தலைவர்கள் பற்றிய விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
பொதுக்கூட்டங்கள் நடைபெறுவதையொட்டி, அந்தந்த மையங்களுக்கு அருகாமையில் உள்ள மாவட்டங்களில் விரிவான பிரசார இயக்கங்கள் மேற்கொள்ளப்படும். நாட்டு நலன் காக்க, இடதுசாரி கட்சிகள் மேற்கொண்டுள்ள இந்த பிரசார இயக்கத்திற்கு முழு ஆதரவளிக்க வேண்டும் என்று அனைத்து பகுதி மக்களையும் கேட்டுக் கொள்கிறோம்'' என்று கூறியுள்ளனர்.