Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: உபா‌த்யாயா த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌ம்!

டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: உபா‌த்யாயா த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌ம்!
, வெள்ளி, 18 ஜூலை 2008 (09:58 IST)
டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் கூடுதல் காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் (டி.ஜி.பி.) உபாத்யாயாவை, த‌மிழக அரசு த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌ம் செ‌ய்து‌ள்ளது.

தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதிக்கும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக இருந்த கூடுதல் காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் உபாத்யாயாவுக்கும் இடையே நடைபெற்ற டெலிபோன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்டு டேப் செய்யப்படுவதாக உளவுத்துறை மீது புகார் கூறப்பட்டது.

இதற்கிடையே அப்போது அமைச்சராக இருந்த பூங்கோதையும் கூடுதல் காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் உபாத்யாயாவும் டெலிபோனில் பேசிய பேச்சு விவகாரம் தனியார் டி.வி.யில் ஒளிபரப்பானது. இதைத் தொடர்ந்து அமைச்சர் பூங்கோதை பதவி விலகினார்.

டெலிபோன் ஒட்டு கேட்பு தொடர்பாக உண்மையை விசாரிக்க நீதிபதி பி.சண்முகம் தலைமையில் விசாரணை ஆணைய‌ம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணைய‌‌ம் கடந்த வாரம் அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. விசாரணையின் போது, அதிகாரிகள் டெலிபோனில் பேசுவதை தன்னுடைய லேப்டாப்பில் பதிவு செய்ததாக உபாத்யாயா கூறியிருந்தார். மேலும் லேப்டாப் பழுதடைந்ததால், ஏற்கனவே பதிவு செய்ததை டி.வி.டி.யில் பதிந்து வைத்ததாகவும் அதில் ஒன்று காணாமல் போய்விட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்தநிலையில், டெலிபோன் ஓட்டுக்கேட்பு விவரங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியானது தெரியவந்தது. உபாத்யாயாவிடம் உதவியாளராக வேலைபார்க்கும் சங்கர், இந்த பேச்சுக்களை வெளியிட்டார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து தற்போது உபாத்யாயா மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கவனக்குறைவாக செயல்பட்டதால், லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. உபாத்யாயா நேற்றிரவு த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌ம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு அவரிடம் வழங்கப்பட்டது.

தற்போது உபாத்யாயா எந்த பதவியிலும் இல்லை. காத்திருப்போர் பட்டியலில் அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. உதவியாளர் சங்க‌ரிட‌ம் சி.பி.சி.ஐ.டி. தனிப்படை‌‌யின‌ர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil