கட்சத்தீவின் மீதான உரிமைகளை மீட்கும் நேரம் வந்து விட்டது என்று கூறியுள்ள முதல்வர் கருணாநிதி, சிறிலங்கக் கடற்படையினர் நடத்தும் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பலியாகி வருவதைக் கண்டித்து எல்லா கடலோர நகரங்களிலும் கடலோர மாவட்டங்களின் தலைநகரங்களிலும் தி.மு.க. சார்பில் வருகிற 19 ஆம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
அண்மையில் சிறிலங்கக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நாகப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து, சென்னையில் இன்று தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி தலைமையில் நடந்த தி.மு.க. உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு தீர்மானத்தை விளக்கிச் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, எல்லாக் கடலோர நகரங்களிலும் கடலோர மாவட்டங்களின் தலைநகரங்களிலும் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மாநில அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றார்.
அப்பாவி மீனவர்கள் மீதான சிறிலங்கப் படையினரின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தி, இச்சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் நோக்கம் என்றார் அவர்.
கட்சத்தீவில் உள்ள தேவாலயத்திற்கு செல்வதற்கும், அந்தத் தீவைச் சுற்றி மீன் பிடிப்பதற்கும், அங்கு ஓய்வெடுப்பதுடன் தங்களின் வலைகளைக் காய வைப்பதற்கும் இந்திய மீனவர்களுக்கு உரிமை உள்ளது என்பதைக் குறிப்பிட்ட கருணாநிதி, நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தபோது அந்த உரிமைகள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம்சாற்றினார்.
கட்சத்தீவை மீட்பதுடன், அந்தத் தீவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மீன் பிடிப்பதற்கும், தங்கள் வலைகளைக் காய வைப்பதற்கும் இந்திய மீனவர்களுக்கு உள்ள உரிமையையும் மீட்பதற்கான நேரம் வந்து விட்டது என்றார் கருணாநிதி.
தமிழக மீனவர்கள் பன்னாட்டுக் கடல் எல்லையைத் தாண்டியதால் சுடப்பட்டார்கள் என்று வெளியாகியுள்ள செய்திகள் பற்றிக் கருணாநிதி கூறுகையில், "மீனவர்கள் தற்செயலாக கடல் எல்லையைத் தாண்டியிருப்பார்கள், அதற்காக அவர்களைச் சுடுவதா? சிறிலங்கப் படையினர் அவர்களை எச்சரித்துத் திருப்பி அனுப்பியிருக்கலாம் அல்லது கைது செய்து பின்னர் விடுவித்திருக்கலாம். பன்னாட்டுக் கடல் எல்லையைத் தாண்டியதால் மீனவர்கள் சுடப்பட்டார்கள் என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றார்.
தமிழக மீனவர்களின் மீதான சிறிலங்கப் படையினரின் தாக்குலை வன்மையாகக் கண்டித்தும், இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும என்று வலியுறுத்தியும் மற்றொரு தீர்மானமும் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
"சிறிலங்கத் தலைநகர் கொழும்பில் இந்த மாதம் நடக்கவுள்ள தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக மீனவர் மீதான சிறிலங்கப் படையினர் தாக்குதல் குறித்த இந்திய அரசின் அதிருப்தி, கவலை, ஆதங்கம் ஆகியவற்றை சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் இனிமேல் நடக்காமல் தடுப்பதற்கான உறுதியை மகிந்த ராஜபக்சவிடம் பெற வேண்டும்" என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது.