இந்திய விடுதலைக்காக போராடிய தியாகி செண்பகராமன் போன்ற தலைவர்களை என்றைக்கும் மறக்க மாட்டோம் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
.
தியாகிகள் தினத்தையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாகி செண்பகராமன் சிலையை முதலமைச்சர் கருணாநிதி இன்று திறந்து வைத்தார்.
பின்னர் அவர் உரையாற்றுகையில், ''இன்று நடைபெறுகின்ற இந்த சிலை திறப்பு விழா நாம் முன்னோர்களை மறந்துவிடவில்லை. நமக்கு சுதந்திரம் வாங்கித்தர போராடியவர்களை என்றைக்கும் மறக்க மாட்டோம் என்பதற்கு அடையாளமாக எழுப்பப்பட்டுள்ள சிலையின் திறப்பு விழாவாகும்.
இந்தியாவின் விடுதலைக்காக போராடிய தியாகி செண்பகராமனுடைய வாழ்க்கை வரலாறு இந்தியாவை பொறுத்த அளவில் பெருமளவிற்கும், தமிழகத்தை பொறுத்தவரை ஓரளவிற்கும் மறைக்கப்பட்ட வரலாறு, மறைந்து கிடக்கின்ற வரலாறாகும்.
தியாகிகள் பாஷ்யம், சங்கரலிங்கனார் ஆகியோருக்கு சிலை வைத்திருப்பதைப்போல தியாகி செண்பகராமனுக்கும் சிலை திறந்துள்ளோம். அவர் செய்த தியாகங்கள் சாதாரணமானவை அல்ல.
செண்பகராமனை "ஜெய்ஹிந்த் செண்பகராமன்' என்றுதான் அழைத்தார்கள். 1907ம் ஆண்டிலேயே அவர் இந்த முழக்கத்தை செய்தவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஐ.என்.ஏ. படை இந்த முழக்கத்தை செய்வதற்கு முன்பாகவே இதனை தொடங்கி வைத்தவர் செண்பகராமன்.
லெனின், இட்லர் போன்ற தலைவர்களோடு பழகியவர். இந்தியாவைப் பற்றி இட்லர் இழிவாக பேசிவிட்டார் என்பதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வேறு வழியில்லாமல் இட்லர் ஒருவரிடத்திலே மன்னிப்பு கேட்டார் என்றால் அது, செண்பகராமன் இடத்தில் மட்டுமே என்பதை வரலாறு கூறுகிறது.
அப்படிப்பட்ட வீரம் செறிந்த செண்பகராமன் திருவனந்தபுரத்திலே தோன்றி, தமிழகத்திலே வாழ்ந்து சென்னை கோட்டை வரை "எம்டன் கப்பலிலே' வந்து குண்டுபோடும் பெரும் காரியத்தில் ஈடுபட்டார். அவரை இதற்கு மேல் வாழவிடக் கூடாது என்று ஜெர்மனியிலே உள்ளவர்கள் அவருடைய உணவில் மெல்ல கொல்லுகின்ற விஷத்தை கலந்து அதன் காரணமாக அவர் உயிர் விட்டார் என்று வரலாற்று குறிப்பு தெரிவிக்கிறது.
அவ்வளவு வீரம் செறிந்த அவருடைய சிலையை திறந்து வைக்கும் பேரு கிடைத்தமைக்காகவும், அதனை நிறைவேற்றுகின்ற வாய்ப்பு கிடைத்தமைக்காகவும் தமிழக மக்களுக்கு நன்றி செலுத்துகிறேன்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.