மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வரும் 19ஆம் தேதி நாகப்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சிறிலங்கா கடற்படையினரால் துப்பாக்கிச்சூடு நிகழ்வுகள் நடந்துள்ளதால் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் அச்சத்தில் உறைந்துபோய் உள்ளனர். சிறிலங்கா கடற்படையினரின் தொடர் தாக்குதல் காரணமாக அப்பகுதி மீனவர்கள் இன்று வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரையோ அல்லது பாதிக்கப்பட்ட மீனவர்களையோ நேரில் சென்று சந்திப்பது; அவர்களுக்கு தேவையான இழப்பீட்டை வழங்குவது; காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, சிறிலங்கா அரசுடன் பேசி இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது உள்ளிட்ட எந்த தொடர் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் மவுனம் சாதிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப்போக்கை கண்டித்தும், சிறிலங்காவில் கடற்படையினரால் சுடப்பட்டு மரண மடைந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா, 5 லட்சம் ரூபாய் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வலியுறுத்தியும், காயமடைந்தவர்களுக்கு தேவையான உயர்தர சிகிச்சை மற்றும் நிவாரண உதவிகள் வழங்க வலியுறுத்தியும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் வரும் 19ஆம் தேதி காலை 10.30 மணியளவில் அவுரித் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.