முதலமைச்சர் கருணாநிதியின் உறுதிமொழியை ஏற்று கடந்த 13 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை விலக்கி கொள்வதாக அறிவித்துள்ளனர்.
தமிழக மற்றும் புதுவை மீனவர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் போஸ் தலைமையில் மீனவ பிரதிநிதிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசினர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போஸ், ''இன்று முதலமைச்சரை சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்தோம். அவர் அளித்த உறுதி மொழியை ஏற்று 15 நாட்களாக மீனவர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தத்தை இன்று கைவிடுகிறோம்.
குறிப்பாக சிறிலங்கா கடற்படையிடம் பிடிபட்ட 5 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். 24ஆம் தேதி இது தொடர்பான வழக்கின் வாய்தா வரும் அன்றைய தினமே அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எங்களிடம் உறுதி அளித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஏற்கனவே அரசு ரூ.1 லட்சம் வழங்குவதை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக முதல்வர் குறிப்பிட்டார். காயமடைந்த மீனவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், அதற்கான செலவையும் அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும் சார்க் மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா செல்லும் பிரதமரிடம் அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சந்தித்து மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வலியுறுத்துமாறு மாநில அரசு பிரதமரிடம் எடுத்துக் கூறும் என்றும் முதலமைச்சர் எங்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும். தாக்குதல்களை தடுக்க கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்றை ஏற்படுத்தி இந்த குழுவினர் டெல்லி சென்று பிரதமரிடம் நேரில் இது குறித்து வலியுறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் எங்களிடம் உறுதி அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து எங்களது போராட்டங்களை திரும்ப பெற்று வரும் 19ஆம் தேதி முதல் மீன்பிடிக்க செல்வது என்று முடிவு செய்துள்ளோம் என்று போஸ் கூறினார்.
கடந்த 13 நாட்களாக நடந்த வந்த மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.