''என்னை பற்றி தவறாக திரைஉலகில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நான் சினிமாவுக்கு எதிரியல்ல'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
சென்னையில் நடந்த சந்தன வீரப்பன் பற்றிய சந்தனக்காடு தொடரின் வெற்றிவிழாவில் கலந்து கொண்டு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், '' சந்தனகாடு தொடரில் உண்மையை உள்ளவாறே சொல்ல நினைத்தபோது, பல உண்மைச் செய்திகளை சொல்லமுடியாமல் போனதற்காக நானும், இயக்குனரும் வருத்தப்பட்டோம்.
உண்மை எப்போதுமே அதிகமாக கசக்கும். அதில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் வாழ்கிறார்கள், ராஜ்குமாரை தவிர. உண்மையான வீரப்பனின் பேச்சை காட்டி இருக்கலாம். முயற்சித்தோம், முடியவில்லை. காரணம் தெரியவில்லை.
வீரப்பனால் பயன்பெற்றவர்கள், விளம்பரம் தேடியவர்கள், பணக்காரர் ஆனவர்கள் வாழட்டும். அதிரடிப்படையினர் அத்துமீறியவர்கள் என்பதைவிட தண்டிக்கப்பட வேண்டியவர்கள். சிறையில் வாட வேண்டியவர்கள்.
என்னை பற்றி தவறாக திரைஉலகில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நான் சினிமா துறைக்கு எதிரி என்று. நான் சினிமாவுக்கு எதிரியல்ல. சினிமா வேறு, தொலைக்காட்சி வேறு. சினிமாவில் உள்ளதை தொலைக்காட்சியில் 90 விழுக்காடு காட்டுவது கூடாது. எந்த நாட்டிலும் இப்படி செய்வது இல்லை. தொலைக்காட்சி தனி ஊடகம். திரைத்துறை தனி ஊடகம். இரண்டையும் மசாலாவாகக் கொடுப்பதைத்தான் எதிர்க்கிறோம்.
உலக திரைப்பட விழாவிற்கு இங்கிருந்து திரைப்படங்கள் செல்ல வேண்டும். எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அருமையான படம் தயாரிப்பவர்களை ஊக்கப்படுத்துவேன்'' என்று ராமதாஸ் கூறினார்.