''காங்கிரஸ் அரசுக்கு எதிராக வாக்களிப்பது தொடர்பாக இடதுசாரி கட்சிகளில் எந்த பிளவும் இல்லை'' ' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் ராஜா கூறினார்.
மத்திய அரசைக் கண்டித்தும், இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை தாங்கள் எதிர்ப்பதற்கான காரணங்களை மக்களுக்கு விளக்குவதற்காக சென்னையில் இன்று இரவு இடதுசாரிகள் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் ராஜா ஆகியோர் இன்று காலை சென்னை வந்தனர்.
விமான நிலையத்தில் ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''மதவாத சக்திகள் தலை எடுத்து விடக்கூடாது என்பதற்காக மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு கொடுத்தோம்.
மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டதாலும், அணு சக்தி ஒப்பந்த நிலைபாட்டாலும் ஆதரவை விலக்கி கொண்டோம். நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுவதாக கூறப்படுவதை ஏற்க முடியாது.
சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவது குறித்து சோம்நாத் சட்டர்ஜி விரைவில் நல்ல முடிவு எடுப்பார். காங்கிரஸ் அரசுக்கு எதிராக வாக்களிப்பது தொடர்பாக இடது சாரி கட்சிகளில் எந்த பிளவும் இல்லை'' என்றார் ராஜா.
முதலமைச்சர் கருணாநிதியை சந்திப்பீர்களா என்று பிரகாஷ் காரத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்காக நான் இங்கு வரவில்லை என்றார்.