பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து செயல்படுத்தவும், திறம்பட கண்காணிக்கவும் பேரூராட்சிகள் துறையின் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்களுக்கு 21 வாகனங்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ''பேரூராட்சிகள் துறையின் ஒரு செயற்பொறியாளர், 20 உதவி செயற்பொறியாளர்களுக்கும் வாகனம் வழங்கும் விழா இன்று சென்னை கோபாலபுரம் விளையாட்டு திடலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 21 வாகனங்களை வழங்கினார்.
பேரூராட்சிகள் பொறியியல் பிரிவினை பலப்படுத்திட பேரூராட்சிகள் துறைக்கு கூடுதலாக 5 உதவி செயற்பொறியாளர் பணியிடங்களும், 35 உதவி, இளநிலை பொறியாளர்கள் பணியிடங்களும், 23 வரைவாளர் பணியிடங்களும், 250 பணி ஆய்வாளர் பணியிடங்களும் ஆக மொத்தம் 313 பணியிடங்கள் அரசால் அனுமதிக்கப்பட்டு ஆணையிட்டுள்ளது.
பெரும்பான்மையான பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டதன் காரணமாக மாவட்டங்களில் நடைபெறும் திட்டப்பணிகள் தரமாகவும், விரைவாகவும் செயல்படுத்திட திறம்பட கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகளை மேலும் விரைந்து செயல்படுத்தவும், திறம்பட கண்காணிக்கவும், செயற்பொறியாளர், 20 உதவி செயற்பொறியாளர்களுக்கு மொத்தம் 21 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.