'தி.மு.க.வினரை சுட்டுத் தள்ள வேண்டும் என்று நான் பேசாத ஒன்றை பேசியதாக வேண்டுமென்றே திட்டமிட்டு திரித்து செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது' என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த 13ஆம் தேதி அன்று தே.மு.தி.க. சார்பில் ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்கள், சிறிலங்கா கடற்படையினரால் சுடப்பட்டுவதைக் கண்டித்து எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஏராளமான அளவில் மீனவர்கள் பங்கு பெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தை பற்றி அங்கு வந்திருந்த பல பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அவற்றை வெளியிட்டன. ஆனால் ஒருவார பத்திரிகை நான் அங்கு பேசாததை பேசியதாக வெளியிட்டிருக்கிறது.
இந்த வாரம் 20-7-08 தேதியில் வெளியிடப்பட்டுள்ள அந்த பத்திரிகையில் முதல் பக்கம் அட்டையிலேயே எனது புகைப்படத்துடன், ஆளும் தி.மு.க.வினரை சுட்டு தள்ள வேண்டும் என்று நான் பேசியதாக தலைப்பிடப்பட்டுள்ளது. பத்திரிகையின் உட் பகுதியில் வந்துள்ள செய்தி யிலும், தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க திராணி இல்லாத ஆளும் தி.மு.க.வினரை சுட்டுத் தள்ள வேண்டும் என்று நான் முழக்கமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறியவாறு நான் அங்கு பேசாதது மட்டுமல்ல, எங்குமே பேசக் கூடியவன் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பேசாத ஒன்றை ராமேஸ்வரத்தில் பேசியதாக செய்தி வெளியிட்டிருப்பது வேண்டுமென்றே திட்டமிட்டு திரித்து வெளியிடப்பட்டிருப்பது மட்டுமல்ல, என்னைத் தனிப்பட்ட முறையில் அவதூறு செய்வதற்கும், நாட்டு மக்களிடையே கலவரத்தை தூண்டி அமைதியைச் சீர்குலைக் கும் செயலாகவும் அமைந்துள்ளது.
கடந்த 6.7.08 அன்றும் இதே போன்று அட்டையில் என் புகைப்படத்தை போட்டு, தன்னிலை மறந்து பேசிய விஜயகாந்த், என்று தலைப்பிட்டு நடக்காத நிகழ்வை நடந்தது போல் அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது. உள்நோக்கத்தோடு செய்திகளை இட்டுகட்டி வெளி யிட்டு பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது'' விஜயகாந்த் கூறியுள்ளார்.