ஜெயலலிதா சென்னை திரும்பியவுடன் இரண்டு வாரத்திற்குள் அவரை சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறியுமாறு பாதுகாப்பு அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தமக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜெயலலிதாவை சந்தித்து இரண்டு வாரகாலத்திற்குள் கருத்தை அறிந்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டார்.
காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அந்தஸ்துக்கு குறையாத ஒரு அதிகாரியை நியமித்து இது குறித்து கருத்து கேட்டறிய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, துரைகுமார் என்ற பாதுகாப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்தது. இதைத் தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு துரைசாமி கேட்டிருந்தார்.
கொடநாடு எஸ்டேட்டில் தங்கி இருக்கும் ஜெயலலிதா, ஜூலை 2ஆம் தேதி மாலை 4 மணிக்கு கொடநாடு எஸ்டேட்டில் வந்து சந்திக்குமாறு துரைகுமாருக்கு நேரம் ஒதுக்கி இருந்தார். ஆனால், பாதுகாப்பு அதிகாரி கொடநாடு எஸ்டேட்டுக்கு செல்ல மறுத்து விட்டார். இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
ஜெயலலிதா நேரம் ஒதுக்கியபடி அவரை சந்திக்கவில்லை என்றும், நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்து விட்டது என்றும் அவர் தமது மனுவில் கூறியிருந்தார்.
ஜெயலலிதாவை போயர்ஸ் கார்டனில் தான் சந்தித்து கருத்தறிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் பாதுகாப்பு அதிகாரி கொடநாடு எஸ்டேட்டுக்கு செல்லவில்லை என்று அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
கொடநாடு எஸ்டேட்டிலும் ஜெயலலிதா பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு சென்று கருத்தறிய வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். கொடநாடு எஸ்டேட் பாதுகாப்பு குறித்து தனி மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை வலியுறுத்தாத ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர், ஜெயலலிதா சென்னை திரும்பியதும் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிப்பதாக கூறினார்.
ஜெயலலிதா சென்னை திரும்பியதாக தகவல் கிடைத்தவுடன், இரண்டு வார காலத்திற்குள் அவரை சந்தித்து பாதுகாப்பு குறித்து கருத்து கேட்டறிய வேண்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று உத்தரவிட்டார்.