சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து, அவர்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து என்.வரதராஜன் வலியுறுத்தினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் என்.வரதராஜன், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பாலபாரதி, என்.நன்மாறன் ஆகியோர் முதலமைச்சர் கருணாநிதியை நேற்று கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதும், துப்பாக்கி சூட்டிற்கு உள்ளாவதுமான நடவடிக்கைகள் கவலை தருவதாக இருக்கிறது. இதனை தடுத்து நிறுத்துவதற்கும், தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்கும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
சீரான மின் விநியோகம் வழங்கப்பட வேண்டும். மின்வெட்டு நிலை தொடராது இருப்பதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். நீர்வழி புறம்போக்கில் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா கிடைப்பதற்கு உரிய வகை மாற்றம் செய்து வழங்க வேண்டும். 2 ஏக்கர் நிலம் திட்டத்தில் நிலமற்றவர்களுக்கு நிலமும், இலவச வீட்டுமனை பட்டாவும் வழங்கிட வேண்டும்.
ஹூண்டாய் மற்றும் ஆர்க்கிட் கெமிக்கல்ஸ் போன்ற சென்னையை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் தொழிற்சங்க உரிமை பறிக்கப்பட்டு வரும் அபாய நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் பகுதி நேர பணியாளர்களின் பிரச்சினை மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் கூலி உயர்வு கோரிக்கையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட மக்களின் உடனடி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார்கள். முதலமைச்சர் கருணாநிதியும் அந்த கோரிக்கைகளை பரிசீலித்து ஆவன செய்வதாக தெரிவித்தார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.