தமிழக அரசிடம் தொலைநோக்கு பார்வை இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் குற்றம்சாற்றியுள்ளார்.
திருப்பூரில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''தமிழகத்தில் ஏற்படும் தொடர் மின்வெட்டால் மாணவர்களும், பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பும் ஏற்படுகிறது.
தொழில்நுட்ப வசதிகள், வாங்கும் சக்தி அதிகரிப்பு ஆகியவற்றால் மக்களின் தேவை அதிகரித்துள்ளது. அத் தேவையை பூர்த்தி செய்யும் தொலைநோக்குப் பார்வை அரசிடம் இல்லை. தொடர் மின்வெட்டை தவிர்க்க மின் உற்பத்தியைப் பெருக்குவதுடன், விநியோகத்தையும் சீர்படுத்த வேண்டும்.
தீவிரவாதிகள் என நினைத்து தமிழக மீனவர்களை சிறிலங்கா ராணுவம் சுட்டு வீழ்த்துகின்றனர். அதனால், மீன்பிடிப்புத் தொழில் செய்ய முடியாத நிலையில் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். அரசு தீவிர கவனம் செலுத்தி இப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.
தற்போது அரசுத்துறைகள் அனைத்திலும் உள்ள ஆள் பற்றாக்குறைக்கு அரசின் நிர்வாகச் சீர்கேடுதான் முக்கியக் காரணம் என்று சரத்குமார் கூறினார்.