முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை தண்டனை காலத்திற்கு முன்னதாகவே விடுதலை செய்யக்கூடாது என்றும் இந்த வழக்கில் தன்னையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றும் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
நீதிபதி வி.எஸ். நாகமுத்து முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை இந்த நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது. ஆனால் அவரை இந்த வழக்கின் எதிர் மனுதாரராக சேர்க்க முடியாது என்றார்.
இந்த வழக்கு தொடர்பாக சுப்பிரமணிய சுவாமியின் சந்தேகங்களை, நளினியை முன்னதாக விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி மாநில அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு தெளிவுப்படுத்தி உள்ளது. ஆகையால் இந்த வழக்குத் தொடர்பாக சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தான் ஏற்கனவே 17 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டதால் தன்னை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் தன்னையும் எதிர் மனுதாரராக சேர்த்துக்கொள்ளக்கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் நளினியை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
அவரது மனுவுக்கு நளினி சார்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் என்னை விடுதலை செய்வதற்கு சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை கேட்க வேண்டியதில்லை. அவருடைய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அவரை எதிர் மனுதாரராக சேர்க்கக்கூடாது என்று நளினி பதில் அளித்திருந்தார்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினியை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று தமிழக அரசும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. மேலும் சுப்பிரமணியசுவாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் மனுதாக்கல் செய்யப்பட்டது.
நளினி தொடர்ந்த வழக்கில் சுப்பிரமணியசாமி தாக்கல் செய்த மனுவை சேர்ப்பது தேவையற்றது. அவரை இந்த வழக்கில் சேர்ப்பதால் அரசின் நிலைப்பாடு மாறப்போவதில்லை. மனுவில் சுப்பிரமணியசாமி கூறிய கருத்துக்களை கடுமையாக எதிர்க்கிறோம். இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் கிடையாது. மத்திய-மாநில அரசுகள், நளினிக்கு சாதகமாக முடிவெடுப்பார்கள் என்றும் முன்கூட்டியே விடுவிப்பார்கள் என்று கூறுவதும் தவறு என தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.