காவலர்களின் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக அடுத்த இரண்டு ஆண்டுக்குள் 15,000 காவலர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் (டி.ஜி.பி) கே.பி.ஜெயின் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''தமிழ்நாட்டில் பல்வேறு வழக்குகளில் காவல்துறையினர் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். முக்கிய வழக்குகளில் பலருக்கு தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடுமையாக தண்டனைகள் விதிக்கப்பட்டு இதுவரை 5 கோடியே 62 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் சென்னையில் சாலை விபத்துக்கள் கணிசமாக குறைந்துள்ளது.
வடபழனியில் நடந்து வரும் மர்மக்கொலைகள் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு பேர் எரித்துக்கொல்லப்பட்ட நிகழ்வில் முக்கிய தடயம் ஒன்று சிக்கியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் கொலை வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழக காவல் நிலையங்களில் காவல்துறையினரின் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் 15,000 காவலர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.
தங்க காசு மோசடி வழக்கில் இதுவரை ரூ.190 கோடி மதிப்புள்ள பங்கு வர்த்தக முதலீடுகள், சொத்துக்கள், தங்க, வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பத்மா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் 653 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். நடப்பாண்டில் 667 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தலைமை இயக்குனர் ஜெயின் கூறினார்.