தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு தவறாகப் பயன்படுத்துவதை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் குழு இன்று டெல்லி சென்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 'காடுவெட்டி' குரு கடந்த ஜுலை 10ம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோரை நேரில் சந்தித்து குரு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பின் எழுந்துள்ள அரசியல் நிலைமையை விளக்க இருப்பதாக அன்புமணி கூறியுள்ளார்.
டெல்லி புறப்படுவதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு தவறுதலாக பயன்படுத்துவது குறித்து மத்திய தலைவர்களைச் சந்தித்து விளக்க இருப்பதாக கூறினார்.
வன்னியர் சங்கத் தலைவரும், பா.ம.க.வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான 'காடுவெட்டி' குருவை, அரியலூர் மாவட்டத்திலுள்ள காடுவெட்டி கிராமத்தில் கடந்த 5ஆம் தேதி அதிகாலையில் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.