''மக்களிடையே செல்வாக்குப் பெற்ற 70-லிருந்து 80 முக்கிய சேனல்களை அளிக்க அரசு கேபிள் டிவி நிறுவனம் முடிவு செய்துள்ளது'' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் இணைப்பு வழங்கும் சேவையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், பல சவால்களை எதிர்கொள்ள நேர்ந்திருந்தாலும் சொன்னபடி சொன்ன
நாளில் அப்பணிகள் இன்று தொடங்கப்படுகின்றன என்றார் முதல்வர் கருணாநிதி.
மத்திய அரசு 77 ரூபாய்தான் வசூலிக்க வேண்டும் என்ற நிலை இருக்கும் போது, தமிழக அரசு ரூ.100 ஏன் வசூலிக்க வேண்டும் என்பது தான் புகார் கூறுகின்றனர். மத்திய அரசின் “டிராய்” அறிவித்த கட்டணமான 77 ரூபாய் “Free to Air ” என்ற இலவச சேனல்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவித்த கருணாநிதி, அரசு கேபிள் டிவி நிறுவனமோ இலவச சேனல்களைத் தவிர, கட்டணச் சேனல்களும் கொடுப்பதால் 100 ரூபாய் வரை வசூலிக்கலாம் என எடுத்துள்ள முடிவு சரியானதே என்று கூறினார்.
அரசு கேபிள் டிவி நிறுவனம், தற்போது பொது மக்கள் செலுத்திவரும் கட்டணத்தைவிட அதிகக் கட்டணத்தை நிச்சயமாக வசூலிக்காது என்று உறுதிபட கூறிய கருணாநிதி, முதல் கட்டமாக, அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் முன்பதிவு செய்திருக்கும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு இணைப்புகள் வழங்கப்படும். முன்பதிவு செய்யாத கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு, விரைவில் இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்படும். அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட முன்வரும் அனைவருக்கும் அரசு கேபிள் டிவி நிறுவனம் இணைப்புகள் வழங்கும். தற்போது இயங்கி வரும் எம்.எஸ்.ஓ. நிறுவனங்களும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கருணாநிதி தெரிவித்தார்.
தற்போது, 300-க்கு மேற்பட்ட கட்டணச் சேனல்கள் இயங்கி வருகின்றன. அவை அனைத்தையும் அரசு கேபிள் டிவி நிறுவனம் அளிப்பது சாத்தியமாகாது. மக்களிடையே செல்வாக்குப் பெற்ற 70-லிருந்து 80 முக்கிய சேனல்களை அளிக்க அரசு கேபிள் டிவி நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று கூறினார் கருணாநிதி.
இச்சேனல்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடைய சேவைகளை வழங்குமாறு அரசு கேட்டுக் கொண்டது. அதற்குப் பெரும்பாலான கட்டணச் சேனல்கள், அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்குத் தங்கள் சேவைகளை வழங்க இசைவு தெரிவித்துள்ளன. சில கட்டணச் சேனல்கள் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்குச் சேவைகள் வழங்க இதுவரை இசைவு தெரிவிக்கவில்லை. அவர்களிடமிருந்து சேவைகள் பெற சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் முதல்வர் கருணாநிதி.