சிறிலங்கா கடற்படையை கண்டித்தும், மத்திய- மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வேதாரண்யத்தில் நாளை மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுதுறையை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடந்த 12ஆம் தேதி சிறிலங்கா கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சிறிலங்கா கடற்படையினரின் இந்த காட்டுமிரண்டித்தனமான தாக்குதலை கண்டித்து வேதாரண்யம், புஷ்பவனம், கோடியமுனை, ஆறுகாட்டு துறை ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மூன்று நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆறுகாட்டுதுறையில் நடைபெற்ற மீனவர்களின் கூட்டத்தில் சிறிலங்கா கடற்படையினரை கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மத்திய- மாநில அரசுகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. மேலும் 16 ஆம் தேதி (நாளை) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டம் மீனவர் கூட்டமைப்பு தலைவர் சேதுபதி நாட்டார் தலைமை நடைபெறுகிறது.
வரும் 18ஆம் தேதி காரைக்கால் மீனவர்கள் சார்பில் மவுன ஊர்வலம், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.