சூரிய ஒளி மின்சக்தி யூனிட் ஒன்றுக்கு ரூ.3.15 என்ற தாற்காலிகமாக கட்டண விகிதத்தை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் ரா.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''சூரிய போட்டோவோல்டிக் மற்றும் சூரிய வெப்பசக்தி நிலையங்கள் மூலமாக மின் உற்பத்திக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு முதலீட்டாளரும் அதிகபட்சம் 5 மெகாவாட் அளவுக்கும், ஒவ்வொரு மாநிலமும் 10 மெகாவாட் அளவுக்கும் ஊக்கத் தொகைபெறலாம்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2006-ம் ஆண்டு காற்றாலை மின்உற்பத்தி, உயிர்க்கூழம், மின் உற்பத்தி போன்ற மரபுசாரா எரிசக்தி ஆதாரங்களுக்கு மின் கட்டண வீதத்தை நிர்ணயித்தது. அந்த சமயம் சூரிய மின் சக்திக்கான மின் கட்டண வீதம் நிர்ணயிக்கப்படவில்லை. ஆணையம், சூரியமின்சக்திக்காக, முறையான மின் கட்டண வீதத்தை நிர்ணயிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. முதல்கட்டமாக நிபுணர்களின் கருத்தை பெறுவதன் பொருட்டு கலந்தாய்வுக்கூட்டத்தை கூட்டியுள்ளது.
மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவான டிசம்பர் 2009-ஐ கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயிர்க்கூழ மின்சக்தி மற்றும் கரும்புச்சக்கையில் இருந்து எடுக்கப்படும் மின்சக்திக்கு இணையாக, சூரிய மின் சக்தியின் யூனிட் ஒன்றுக்கு ரூ.3.15 என தற்காலிக மின்கட்டணத்தை முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஆணையம் மத்திய அரசின் பரிந்துரையை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. இது காற்றாலை மின் உற்பத்தியின் ஒரு யூனிட்டுக்கு ரூ.2.90 என்ற மின் கட்டண வீதத்தை விட அதிகமாகும்'' என்று பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.