சிறிலங்கா கடற்படை தாக்குதலைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் 12வது நாளாக இன்றும் தொடர்கிறது.
ராமேஸ்வரம், நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட தமிழக கடலோரப்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படை தாக்குதல் நடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன் நாகை மாவட்ட மீனவர்கள் இருவர் சிறிலங்கா கடற்படை துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர்.
தொடர்ந்து அட்டூழியம் செய்து வரும் சிறிலங்கா கடற்படையினரை கண்டித்தும், மீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு, கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை பெற்றுத்தருவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 3ஆம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்களுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ் குமார் நடத்திய பேச்சிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10ஆம் தேதி பாம்பன் பாலத்தில் மறியல் செய்யப் போவதாக மீனவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து 9ஆம் தேதி மீண்டும் பேச்சு நடத்திய ஆட்சியர், இது குறித்து முதல்வரை சந்தித்துப் பேசுவோம் என அறிவித்தார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. ஆனால் முதல்வரை சந்திப்பதற்கான தேதி குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த ராமேஸ்வரம் அனைத்து மீனவர் சங்கத்தினர் நேற்று அவசரக்கூட்டம் நடத்தினர். சிறுபான்மை விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் மகத்துவம் தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு-புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் போஸ், வேர்க்கோடு மீனவர் சங்கத்தலைவர் அந்தோணிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
முதல்வரை சந்தித்துப் பேசியபிறகு, அடுத்தக்கட்டப் போராட்டம் குறித்து முடிவெடுப்பது என்றும், முதல்வருடன் பேசிய பிறகும் தீர்வு ஏற்படாவிட்டால், உச்சகட்ட போராட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் 12 நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடர்ந்து வருகிறது. இந்த வேலை நிறுத்தத்தினால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம் நீடித்து வருவதால் மேலும் பல கோடி இழப்பு ஏற்படுவதோடு, ஆயிரக்கணக்கான மக்கள் வறுமையில் சிக்கி தவித்து வருகின்றனர். இதற்கு உடனடியாக தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என்று மீனவ சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.