ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எந்த விலை கொடுத்தேனும் தமிழக அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்று முதலமைச்சர் கருணாநிதி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாக தர்மபுரியில் நேற்று செய்தியாளர்களக்கு பேட்டியளித்த பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு இன்று பதிலளித்த முதலமைச்சர் கருணாநிதி, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எந்த விலை கொடுத்தேனும் தமிழக அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக கேட்கப்பட்டதற்கு, இத்திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு கிருஷ்ணகிரி அருகே ஒரு அலுவலகம் திறந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் பல்வேறு நாளிதழ்களில் வெளிவந்துள்ளது.
திட்ட ஆலோசகரை நியமிக்க தமிழக அரசால் டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விரிவான அட்டவணையும், அது தொடர்பான அறிக்கையும் கடந்த மே மாதம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
உண்மையை மறைத்து பா.ம.க. தலைவர் அரசை குற்றம் சாட்டியுள்ளார். இதன் மூலம் அவர்கள் கட்சி இத்திட்டத்தை தொடங்குவதற்கு எவ்வளவு ஆர்வமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இத்திட்டத்தை தொடங்குவதற்கு குறுக்கே யார் வந்தாலும் சகித்துக்கொள்ள முடியாது.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஜப்பான் வங்கியிடம் நிதி கோரியது, ஜப்பான் வங்கியும் இதற்கு நிதி வழங்க ஒப்புதழ் வழங்கி உள்ளது. இத்திட்டத்தை எவ்வளவு விரைவாக நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.