தூத்துக்குடி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நாளை மறுநாள் (16ஆம் தேதி) அ.இ.அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடக்க உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடிநீர் வழங்காத, சுகாதார சீர்கேடுகளை களைய நடவடிக்கை எடுக்காத, அதே சமயத்தில் வீட்டு வரி, வணிக வரி, தொழிற்சாலை வரி, குடிநீர்க் கட்டணம் என அனைத்தையும் கணிசமான அளவுக்கு உயர்த்தியுள்ள தூத்துக்குடி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில், நாளை மறுநாள் தூத்துக்குடியில் உண்ணாவிரதம் நடக்கும்" என்று கூறியுள்ளார்.
"தூத்துக்குடி நகராட்சி நிர்வாகம் வீட்டு வரியை 25 விழுக்காடும், வணிக வரியை 150 விழுக்காடும், தொழிற்சாலை வரியை 100 விழுக்காடும் உயர்த்தியுள்ளது.
நகராட்சி பகுதிகளில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. ஐந்து நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுகிறது. ஆனால், குடிநீர் வரியை உயர்த்த நகராட்சி நிர்வாகம் தவறவில்லை.
பெரும்பாலான வீதிகளில் குப்பைகள் அகற்றப்படாததால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் உட்பட பலவிதமான நோய்களுக்கு மக்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்" என்றும் ஜெயலலிதா குற்றம்சாற்றியுள்ளார்.