பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தோல்வியடைந்துள்ள மத்திய ஐ.மு.கூ. அரசைக் கண்டித்தும், இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை தாங்கள் எதிர்ப்பதற்கான காரணங்களை மக்களுக்கு விளக்கவும் இடதுசாரிகள் துவங்கியுள்ள நாடு தழுவிய போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக சென்னையில் 16 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது.
புது டெல்லியில் இன்று இத்தகவலைச் செய்தியாளர்களிடம் தெரிவித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா, ஹைதராபாத், லக்னோ, பாட்னா உள்ளிட்ட நகரங்களிலும் விளக்கக் கூட்டங்கள் நடக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், இடதுசாரிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரிக் கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்கள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.