அரசு உயர் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.சண்முகம் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் தனது இறுதி அறிக்கையை இன்று தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.
தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் கருணாநிதியிடம் தனது அறிக்கையை நீதிபதி சண்முகம் சமர்ப்பித்தார் என்றும், இவர் ஏற்கெனவே தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்துள்ளார் என்றும் அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
அரசின் தலைமைச் செயலர் எல்.கே.திரிபாதியும் உளவுத்துறை அதிகாரி எஸ்கே.உபத்யாயவும் தொலைபேசியில் பேசிக்கொண்ட விவரங்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியானதுடன், அந்த உரையாடலும் வெளியானதால் இவ்விவகாரம் பற்றி நீதி விசாரணை நடத்தப்படும் என்று சட்டப் பேரவையில் முதலமைச்சர் கருணாநிதி ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவித்ததுடன், மறுநாளே நீதிபதி சண்முகம் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தையும் நியமித்தார்.