சங்கரராமன் கொலை வழக்கில் இன்று சங்கராச்சாரியார்கள் உள்பட 19 பேர் ஆஜராகாததாலும், இந்த வழக்கில் தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராவதை எதிர்த்து சங்கராச்சாரியார்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும் விசாரணையை புதுச்சேரி நீதிமன்றம் ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி உள்பட 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாற்றப்பட்ட 24 பேரில் காஞ்சி சங்கராச்சாரியார், விஜயேந்திர சரஸ்வதி உள்பட 19 பேர் ஆஜராகவில்லை.
மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராவதை எதிர்த்து சங்கராச்சாரியார்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும் வழக்கு விசாரணையை புதுவை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி டி. கிருஷ்ணராஜா ஆகஸ்ட் 22ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் நிர்வாக அறங்காவலராக இருந்த சங்கரராமன் கடந்த 2004ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி கோயிலிற்குள்ளேயே கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலைத் தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியர்கள் இருவர் உள்ளிட்ட 24 பேர் மீது கொலை செய்தல், சதி திட்டம், நீதிமன்றத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கியது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.