தென்னிந்தியாவின் மிகப்பெரிய மீன் பிடிப்புத் தளங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில், சிறிலங்கக் கடற்படையினரைக் கண்டித்து மீனவர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தினால் சுமார் ரூ.16 கோடி அளவிலான வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் நாள் ஒன்றுக்கு 1,000 டன்னிற்கும் மேற்பட்ட மீன்களைப் பிடிப்பார்கள். மீனவர்கள் கொண்டுவரும் வவ்வால், இரால், வஞ்சரம் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களில் உள்ளூர்த் தேவை போக, மற்றவை சென்னை, தூத்துக்குடி, கொச்சி ஆகிய துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தமிழக மீனவர்களின் மீது சிறிலங்கக் கடற்படையினர் நடத்தும் அத்துமீறிய தாக்குதல்களைக் கண்டித்தும், அதைத் தடுக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த 5ஆம் தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்திவரும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தினால் மீனவர்கள், படகு பழுது பார்ப்பவர்கள், தரகர்கள், பனிக்கட்டி உற்பத்தியாளர்கள் என 20,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான நாட்டுப் படகுகள் தவிர 850 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட விசைப் படகுகளும் கடலுக்குள் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், சிறிலங்கப் படையினர் இன்று நடத்தியுள்ள தாக்குதலில் நாகை மீனவர்கள் 2 பேர் பலியாகியுள்ள காரணத்தால், மீனவர்களின் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று கருதப்படுகிறது.