சொத்து வரி உயர்வு குறித்து மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் விளக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இது குறித்து அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘’நகரங்கள் மண்டலங்களாக பிரிக்கப்பட்ட வேண்டும். மண்டலத்தில் இடம் பெற்றுள்ள தெருக்கள், அங்குள்ள சொத்துக்களை விளக்கி காட்டும் வரைப்படம், அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் அலுவலகத்தில் வைக்கப்பட வேண்டும்.
மண்டலங்களாக பிரிக்கப்பட்டது தொடர்பான விவரங்கள் உள்ளாட்சி அமைப்பின் கவுன்சிலில் வைத்து அங்கீகரிக்க வேண்டும். மண்டலங்களாக பிரிக்கப்பட்டது உள்பட சொத்து வரி எப்படி உயர்த்தப்பட்டது என்பது உட்பட அனைத்து விவரங்களும் பொதுமக்களை சென்றடையும் வகையில் பரவலாக விளம்பரப்படுத்த வேண்டும்.
சொத்து வரி மதிப்பீட்டு படிவங்களை சிரமமின்றி பூர்த்தி செய்து எல்லா விவரங்களும் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சொத்து வரி உயர்வு தொடர்பாக பொதுமக்கள் ஆட்சேபனை மனு கொடுத்தால் அதை பரிசீலித்து உடனுக்குடன் முடிவு எடுக்க வேண்டும்’’ என்று தமிழக அரசு கூறியுள்ளது.