நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ம.தி.மு.க. முடிவுக்கு கட்டுப்படாவிட்டால் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளது என்று ம.தி.மு.க. நாடாளுமன்ற கொறடா பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கூறினார்.
கோவையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அணுசக்தி ஒப்பந்ததுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என ஏற்கனவே வைகோ அறிவித்து விட்டார். எனவே நாடாளுமன்றத்தில் நடக்கும் வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராகத்தான் நாங்கள் வாக்களிப்போம்.
கட்சி முடிவுப்படி நாங்கள் வாக்களிப்போம். வைகோ தலைமையிலான ம.தி.மு.க. தான் உண்மையானது என தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து விட்டது.
எங்கள் கட்சியின் பரம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் தார்மீக அடிப்படையில் ம.தி.மு.க. முடிவுக்கு கட்டுப்பட்டு கொறடா பிறப்பிக்கும் உத்தரவின் படி மத்திய அரசை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.
கொறடா உத்தரவை மீறினால் நாடாளுமன்ற விதிகளின்படி அவர்களது பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளது என்று கிருஷ்ணன் கூறினார்.