நாகை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இரண்டு பேரை சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 1000க்கும் மேற்பட்ட மீனவர்களை சிறைப்பிடித்து சரமாரி தாக்கினர் சிறிலங்கா கடற்படையினர்.
சிறிலங்கா கடற்படையினரின் இந்த தொடர் தாக்குதலை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை அருகே நேற்று நள்ளிரவு 12 மணிக்கு நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த சிறிலங்கா கடற்படையினர் மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் வாசகன், நாராயணசாமி ஆகிய மீனவர்கள் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். முரளி என்ற மீனவர்கள் பலத்த காயம் அடைந்தார்.
இதுகுறித்து மீனவர் முரளி, தனது செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து 20 மீனவர்கள் ஒரு விசைப்படகில் அங்கு சென்று பலத்த காயம் அடைந்திருந்த மீனவர் முரளியை மீட்டு கரைக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்ந்தனர்.
சிறிலங்கா கடற்படையினரின் இந்த தாக்குதல் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் பலியானதால் நாகையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.