பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை சீரும் சிறப்போடு கொண்டாடுமாறு தமிழக காங்கிரசாருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 106ம் ஆண்டு பிறந்தநாள் விழா ஜூலை 15.
கல்விப்புரட்சிக்கு வித்திட்ட காரணத்தால் பெருந்தலைவரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த 2006ம் ஆண்டு அறிவித்தது மட்டுமல்ல, இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் விழாக்களை மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டுமென்பதற்காக அரசு சார்பில் ரூ.1 கோடியே 31 லட்சத்தை அனுமதி அளித்ததற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
தியாக வாழ்வுக்கு உதாரணமாய் வாழ்ந்த காமராஜர், தூய்மைக்கும், மேன்மைக்கும் இலக்கணம் தந்தவர். தமிழக முதல்வர் வரை உழைப்பால் உயர்ந்த அவர் அகில இந்திய தலைவராக மேலும் ஏற்றம் பெற்றார். இந்திய நாட்டின் வலிமைக்கும், தமிழகத்தின் செழுமைக்கும் அவர் ஆற்றிய சாதனைகள் ஏராளம்.
இவ்வாறு வரலாறு போற்றும் நாயகனாக புகழ்பூத்த அவரது பிறந்தநாள் விழாவை தமிழகத்தில் அனைத்து காங்கிரஸ் மாவட்ட, வட்டார, நகர மற்றும் அனைத்து அமைப்புகளிலும் மக்கள் விழாவாக சீரோடும், சிறப்போடும் கோலாகலமாக கொண்டாடிட வேண்டுமென்று பெரிதும் வேண்டுகிறோம் என்று தங்கபாலு கூறியுள்ளார்.