போட்டி ம.தி.மு.க தொடங்கி பொய்யான பிரமாணப் பத்திரங்களை அளித்ததற்காக செஞ்சி ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அதற்கான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்தில் ம.தி.மு.க அளித்துள்ளது.
இது குறித்து, ம.தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வைகோவை பொதுச்செயலாளராக கொண்டு இயங்கும் அமைப்பே உண்மையான ம.தி.மு.க என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. அதே நேரத்தில், போட்டி ம.தி.மு.க தொடங்கிய செஞ்சி ராமச்சந்திரன் பொய்யான பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்தது குறித்து தனியே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
செஞ்சி ராமச்சந்திரனுக்கு ஆதரவாக நாங்கள் பிரமாணப் பத்திரங்கள் எதையும் கொடுக்கவில்லை என்று 72 பேர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை வைகோ, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்தார். அவை சரிபார்க்கப்பட்டு மீண்டும் வைகோவிடமே ஒப்படைக்கப்பட்டது.
தற்போது செஞ்சி ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அந்த பிரமாணப் பத்திரங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது. அதன்படி, ம.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன், அசல் பிரமாண பத்திரங்களை தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.