தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்படுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
குழந்தைகளுக்கான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்யும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான கிண்டி பி.சி.ஜி. இன்ஸ்டிடியூட், குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டிடியூட், இமாச்சல பிரதேசம் கசௌலி ஆய்வகம் ஆகியவற்றின் உற்பத்தியை மத்திய சுகாதாரத்துறை நிறுத்தியுள்ளது.
இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மெமோரியல் ஹால் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரெங்கநாதன், மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் உட்பட மாநில மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.
சைதை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்ம நாபன் உட்பட மாநில, மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.