சிறிலங்கா கடற்படை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரத்தில் இன்று கடையடைப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடந்து வருகிறது.
கடந்த மாதம் 2ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 1000க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை சிறிலங்கா கடற்படையினர் சிறைப்பிடித்து தாக்குதல் நடத்தினர். இதில் பல மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதேபோல் தொடர்ந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்கா கடற்படையை கண்டித்தும், உடனடியாக மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 3ஆம் தேதி முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்திவரும் சிறிலங்கா கடற்படையினரைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் இன்று மீனவர் சங்கங்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தபோவதாக தெரிவித்திருந்தது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட சுமூகமான முடிவினை தொடர்ந்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இருந்தபோதிலும் மீனவர்களுக்கு ஆதரவாக ராமேசுவரம் மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்திவரும், சிறிலங்கா கடற்படையினரைக் கண்டித்து, ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்கங்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.