சென்னை கிண்டியில் அமைந்துள்ள காந்தி மண்டப வளாகத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் ஏர்செல் செல்லூலர் நிறுவனத்திற்கும் இடையே இன்று கையெழுத்தானது.
காந்தி மண்டப வளாகத்திலுள்ள காலியிடங்களை ரூ.78 லட்சம் செலவில் மேம்படுத்த ஏர்செல் செல்லூலர் நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமையில் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி முன்னிலையில் தமிழக அரசுக்கும் ஏர்செல் செல்லூலர் நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஏர்செல் செல்லூலர் நிறுவனம், காந்தி மண்டப வளாகத்தை செய்தித்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவற்றின் மேற்பார்வையில் இயற்கை எழில் கொஞ்சும் வனப்புடன் பொது மக்கள் பயனுற மேம்படுத்தும்.
தற்போது காந்தி மண்டப வளாகத்தில் சில இடங்களில் வளர்ந்துள்ள புதர்கள், காட்டுச் செடிகள் போன்றவற்றை அகற்றிவிட்டு வளாகத்திலுள்ள காலியிடங்களில் அழகிய புல்வெளிகள், புல்வெளிகளைச் சுற்றிலும் 10,000 அடியில் பல்வகை வண்ணச் செடிகளால் ஆன வேலிகள், அழகிய பனை வகை மரங்கள், மலர்ச் செடிகள் ஆகியவற்றை ஏர்செல் நிறுவனம் அமைக்கும்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறையின் முதன்மைச் செயலாளர் (பொறுப்பு) குற்றாலிங்கமும், ஏர்செல் செல்லூலர் நிறுவனத்தின் சார்பாக அதன் தலைமைச் செயல் அலுவலர் பிரதீப்பும் கையெழுத்திட்டனர் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.