2005 மற்றும் 2006ஆம் ஆண்டுக்கான குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான 70 தமிழ்ப்படங்களுக்கு மொத்தம் ரூ.4 கோடியே 90 லட்சம் அரசு மானியம் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான தமிழ்த்திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2005ம் ஆண்டுக்கான மானியங்கள் வழங்க நீதிபதி பொன்.பாஸ்கரன் தலைமையில் குழு அமைத்தது.
இதைத்தொடர்ந்து 2005ம் ஆண்டுக்கான மானியத்துக்காக 45 திரைப்படங்களையும், 2006ஆம் ஆண்டு மானியத்துக்காக 49 திரைப்படங்களையும் மொத்தம் 94 திரைப்படங்களை தேர்வுக்குழுவினர் பார்த்து மொத்தம் 70 படங்களை பரிந்துரைத்துள்ளனர்.
கஸ்தூரிமான், வெற்றிவேல் சக்திவேல், டான்சர், பொன்மேகலை, 6.2, மண்ணின் மைந்தன், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி உள்ளிட்ட 34 படங்கள் 2005ம் ஆண்டுக்கான அரசு மானியத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களாகும்.
தகப்பன்சாமி, இலக்கணம், தூத்துக்குடி, அடைக்கலம், மண், மனதோடு மழைக்காலம், சாசனம் உள்ளிட்ட 36 திரைப்படங்கள் 2006ம் ஆண்டுக்கான அரசு மானியத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தமிழில் பெயரிடப்பட்ட படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு அரசாணைவெளியிட்டது. இந்த அரசாணை நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே 70 திரைப்படங்கள் வெளிவந்துள்ளமையால் அப்பட்டியலில் ஆங்கில கலப்புள்ள தலைப்புகள் கொண்ட தலைப்புகளுக்கும் மானியம் கிடைத்திடும் வகையில் அரசாணை தளர்த்தப்படுகிறது.
இனிவரும் காலங்களில் தமிழில் பெயரிடப்படும் படங்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.