கடலில் காணாமல் போன நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைபேட்டை கிராமத்தை சேர்ந்த செண்பகம், மணிவண்ணன், ஆறுமுகம், சதீஷ், வைத்தியலிங்கம், கலியபெருமாள், ராமையன் ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்கசென்ற போது காணவில்லை.
இது குறித்து அறிக்கை பெற்றபின் மீன் துறை மற்றும் கடலோர காவல்படை மூலமாக தீவிர தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகும் அவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை.
எனவே அந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சர் கருணாநிதி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார். மேலும் அந்த குடும்பத்தினரின் வறுமையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்'' என்று கூறப்பட்டுள்ளது.