தமிழக மீனவர்களை சிறிலாங்க கடற்படையினர் தொடர்ந்து துன்புறுத்தி வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காணாவிட்டால் அ.இ.அ.தி.மு.க. மாபெரும் போராட்டத்தில் குதிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 1,600 பேரை சிறிலங்கா கடற்படையினர் சிறைபிடித்து தலைமன்னாரில் உள்ள கடற்படை முகாம் துறைமுகத்திற்கு கொண்டு சென்று, அவர்களை அடித்து கொடுமைபடுத்தியுள்ளனர். சிறிலங்கா அரசின் இது போன்ற தொடர் நடவடிக்கை காரணமாக தமிழக மீனவர்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
சிறிலங்கா கடற்படையினரின் இது போன்ற தொடர் அராஜகச் செயல்களைக் கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், வருகின்ற 10ஆம் தேதி அன்று பாம்பன் பாலத்தில் மாபெரும் போராட்டம் நடத்த இருப்பதாக மீனவர்கள் அறிவித்து இருக்கின்றனர்.
கடந்த மாதம் 27ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைபேட்டையை சேர்ந்த 3 மீனவர்கள் இன்று வரை கரைக்கு வந்து சேரவில்லை. எனவே, காணாமல் போன மீனவர்களை உடனடியாக மீட்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
சிறிலங்கா கடற்படையினரின் தொடர் துன்புறுத்தல் தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு சோதனையை கொடுத்துள்ளது. 'சோதனை மேல் சோதனை' தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகான வேண்டும் என்று தமிழக மீனவர்களின் சார்பில் கருணாநிதியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பிரச்சினை மேலும் தொடருமேயானால், அ.இ.அ.தி.மு.க. மாபெரும் போராட்டத்தில் ஈடுபடத் தயங்காது'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.