கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவை காவல்துறையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். மேலும் அவரது ஆதரவாளர்கள் 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மீன்சுருட்டி பகுதி காடுவெட்டியைச் சேர்ந்தவர் ஜெ.குரு. இவர் வன்னியர் சங்க மாநிலத் தலைவராக இருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க பாசறையைத் தொடங்கவுள்ளதாகக் கூறிய காடுவெட்டியைச் சேர்ந்த ஜெ.குணசேகரன் என்பவரை குருவின் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். அப்போது அவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.
இதுதொடர்பாக குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில், குரு உள்பட 4 பேர் மீது மீன்சுருட்டி காவல்துறையினர் மே 1ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து காடுவெட்டி குரு எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது.
ஆனால் இதற்கு காவல்துறை தலைமை இயக்குனர் மறுப்பு தெரிவித்தார். காடுவெட்டி குருவை கைது செய்யும் எண்ணம் இல்லை என்றார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை காடுவெட்டி என்ற ஊருக்கு 20 வாகனங்களில் காவல்துறையினர் சென்றனர். அப்போது வீட்டில் இருந்த குருவை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு நீதிபதி ஜீவானந்தம் முன் குருவை ஆஜர்படுத்தினர். இதைத் தொடர்ந்து குருவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் குருவை காவல்துறையினர் வேனில் அழைத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வன்முறை ஏற்படாமல் இருக்க ஜெயங்கொண்டத்தில் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கைது நடவடிக்கை பழிவாங்கும் செயல் என்றும், பா.ம,கவினர் அறவழியில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.