லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக அயல் மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் மஞ்சள், ஜவுளி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. ரயிலில் மற்ற மாநிலங்களில் இருந்து வந்த சரக்குகளை இறக்க ஆள் இல்லாததால் ஈரோடு ரயில் நிலையத்தில் ரூ.120 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேங்கி கிடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து நாள்தோறும் மஞ்சள், எண்ணெய், பிண்ணாக்கு, காய்கறி, தோல் மற்றும் ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் அயல் மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. லாரிகளின் தொடர் வேலை நிறுத்தத்தால் இந்த பணி முற்றிலும் தடைபட்டு இருந்தது.
ஈரோட்டில் இருந்து அகமதாபாத் செல்ல வேண்டிய ரூ.3 கோடி மதிப்புள்ள மஞ்சள், கேரளாவிற்கு செல்ல வேண்டிய ரூ.20 லட்சம் மதிப்புள்ள முட்டை, ரூ,6 கோடி மதிப்புள்ள எண்ணெய், ரூ.17 கோடி மதிப்புள்ள ஜவுளி, ரூ.1.5 கோடி மதிப்புள்ள தோல் மற்றும் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து ஈரோடு மாவட்டம் காங்கேயம் பகுதியில் இருந்து செல்லும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நெய், ரூ.5 லட்சம் மதிப்புள்ள காய்கறிகள் உள்ளிட்ட சரக்குகள் தேங்கியுள்ளது.
கரும்பு விவசாயிகள் பாதிப்பு!
ஈரோடு மற்றும் அண்டை மாநிலங்களில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாய நிலத்தில் கரும்புகள் பயிரிட்டு தற்போது அறுவடை செய்யும் தருணத்தில் உள்ளது. தாளவாடி மலைப்பகுதியில் இருந்து தினமும் 200 லாரிகள் கரும்பு ஏற்றும் பணியில் ஈடுபட்டு வந்தது.
வேலை நிறுத்தத்தால் கரும்புகளை ஆலைகளுக்கு எடுத்து செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இதனால் சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.